சில்லிபாயிண்ட்…

* நியூசியுடன் டி20 தொடர் திலக் வர்மா சந்தேகம்
புதுடெல்லி: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 21ம் தேதி நாக்பூரில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அதிரடி வீரர்களில் ஒருவரான திலக் வர்மா, இடுப்புப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அதனால், நியூசிலாந்துடனான டி20 தொடரில் அவர் ஆட மாட்டார் எனக் கூறப்படுகிறது. விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வரும் திலக் வர்மா, சமீபத்தில் ராஜ்கோட்டில் நடந்த போட்டியின்போது காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* டபிள்யுடிசி தரவரிசை 7ம் இடத்தில் இங்கி
லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடர் முடிவடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) தரவரிசை பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் 7ல் வென்று, 87.5 சதவீத வெற்றியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்து 77.78 சதவீத வெற்றியுடன் 2ம் இடத்திலும், தென் ஆப்ரிக்கா, 75 சதவீத வெற்றியுடன் 3ம் இடத்திலும் உள்ளன. இலங்கை 66.67 சதவீத வெற்றியுடன் 4, பாகிஸ்தான் 50 சதவீத வெற்றியுடன் 5, இந்தியா 48.15 சதவீத வெற்றியுடன் 6ம் இடத்தில் உள்ளன. ஆஸியிடம் மோசமான தோல்விகளை தழுவிய இங்கிலாந்து அணி, 31.67 சதவீத வெற்றியுடன் 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

* எஸ்ஏ20யில் டாப் ஸ்கோர் ஷாய் ஹோப் அதிரடி
டர்பன்: எஸ்ஏ20 கோப்பைக்காக டர்பன் நகரில் நடந்த போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் – டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பிரிடோரியா அணிக்காக ஆடிய ஷாய் ஹோப் 69 பந்துகளில் 9 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 118 ரன் குவித்தார். எஸ்ஏ20 போட்டியில் விளாசப்பட்ட அதிகபட்ச ரன் இது.

இதன் மூலம், பிரிடோரியா 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் ஆடிய டர்பன், 186 ரன்னுக்கு ஆல்அவுட்டாகி தோல்வியை தழுவியது. பிரிடோரியா தரப்பில் பந்து வீசிய லுங்கி நிகிடி, தொடரில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories: