7 நாட்களுக்கான ஆர்ஜித சேவா டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள ஆனந்த நிலையத்தில் (கருவறை மீதுள்ள கோபுரம்) தங்கத்தகடுகள் பதிக்க வரும் 22ம்தேதி முதல் 28ம்தேதி வரை பாலாலயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மேற்கண்ட நாட்களில் ஆர்ஜித சேவை டிக்கெட்களை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில் தங்கத்தகடு பதிக்கும் பணிக்கான டெண்டரில் காலதாமதம் ஏற்பட்டதால் டெண்டரை 6 மாதங்களுக்கு தள்ளி வைப்பதாக தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் 22ம்தேதி முதல் 28ம்தேதி வரையிலான 7 நாட்களுக்கான கல்யாண உற்சவம், டோலோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்காரண சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

எனவே பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்யலாம். முன்னுரிமை அடிப்படையில் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இதேபோன்று 22 முதல் 28ம் தேதி வரையிலான (எலக்ட்ரானிக் டிப்) குலுக்கல் மூலம் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் வரும் 10ம்தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்கள் ஆதார் விவரங்களை தேவஸ்தான இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும் குலுக்கல் முறையில் 10ம் தேதி மதியம் 12 மணிக்கு தேர்வான பக்தர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் வழங்கப்படும்.

இந்த தகவல் பெற்ற பக்தர்கள் இரண்டு நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என்றும், இதேபோன்று ஆன்லைனில் மெய்நிகர் சேவையில் கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவையில் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்களும் வரும் 9ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: