வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர் மனைவி, மாமனார் தீக்குளிக்க முயற்சி-விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

விருதுநகர் : வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக கூறி, அவரது மனைவி, மாமனார் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் சித்ராதேவிக்கும், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான ரமேஷ்க்கும் கடந்த 2017ல் திருமணம் நடைபெற்றது. ரமேஷ் கடந்த 10 மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதுகுறித்து சித்ராதேவி கேட்டால், அவருடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என, மனைவியை ரமேஷ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து சித்ராதேவி, விருதுநகர் எஸ்பியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் மனம் உடைந்த சித்ராதேவி மற்றும் அவரது தந்தை அழகர்சாமி ஆகியோர் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி நேற்று தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து காப்பாற்றி சூலக்கரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: