அதானி ஜி பற்றி எந்த விவாதமும் நடைபெறாமல் இருக்க மோடி ஜி அனைத்து முயற்சிகளையும் செய்வார்: ராகுல் காந்தி குற்றசாட்டு

டெல்லி: அதானி ஜி பற்றி எந்த விவாதமும் நடைபெறாமல் இருக்க மோடி ஜி அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அதானி குழுமம் மறுத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி  நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதற்கிடையே அதானி விவகாரத்தின் மோடி அரசின் மவுனத்தை கண்டித்து நேற்று காங்கிரஸ் நாடு தழுவி போராட்டத்தை நடத்தியது. காங்கிரஸ் டிவிட்டரில், ஹரியானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தின் படங்களை பதிவேற்றம் செய்து, அதானி குழுமத்தின் மோசடி வழக்கில் ஜே.பி.சி. அமைத்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தினர். நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, பிரதமர் மோடியின் நண்பரின் அன்புக்காக பலி கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என பதிவு செய்துள்ளது.

அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், மக்கள் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளாக நான் இந்த பிரச்சினையை எழுப்பி வருகிறேன். பல லட்சம் கோடி ஊழல் நடந்தது, நாட்டின் உள்கட்டமைப்பை ஒரு மனிதன் அபகரித்துள்ளார். அதானி குழுமத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசாங்கம் பயந்து, இதை பற்றி விவாதத்தை விரும்பவில்லை. அதானி ஜி பற்றி எந்த விவாதமும் நடைபெறாமல் இருக்க மோடி ஜி அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என தெரிவித்தார்.

Related Stories: