மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து மேலும் ஓராண்டு விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழி வாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில் இருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்களித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில்.இருந்து ஏன் விலக்கு அளிக்க கூடாது என கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து சுமார் 860க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் கட்டாயம் என கடந்த 2016 ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு ஆணையை ரத்து செய்ய கடந்த 2019ம் ஆண்டு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. எனவே அந்த தேர்வுகளில் மொழி பாடத்தில் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு தமிழ்த் தாளில் இருந்து இந்த ஆண்டும் விலக்களிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன்,‘‘ இந்த விவகாரத்தில் அப்படி விலக்களிப்பதாக இருந்தால் இந்த அமைப்பில் வழக்கு தொட ர்ந்த 860 மாணவர்களுக்கு மட்டுமே விலக்களிக்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாக அனைத்து மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளுக்கும் விலக்களிக்க கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், அனைத்து மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் விலக்களித்துள்ளது என தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேற்கண்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: