கிரிக்கெட் வீரர் தவான் வழக்கில் மனைவிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இருவரும் கடந்த 2020 ம் ஆண்டு முதல் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மனைவி முகர்ஜிக்கு எதிராக ஷிகர் தவான் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டுவதாகவும், ஐபிஎல் தொடரில் தான் முன்பு விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளரான தீரஜ் மல்ஹோத்ராவுக்கு தன்னை பற்றி அவதூறான செய்திகளை கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் எனக்கும், இதுவரை நான் சேர்த்து வைத்திருந்த புகழுக்கும் களங்கம் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரித் குமார், ‘சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட எந்தவொரு நபருக்கோ அல்லது இடத்திலோ தவானை இழிவான மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ஒவ்வொரு நபரும் தனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்று விரும்புவர். கடின உழைப்பால் கிடைத்த நன்மதிப்பும், பெயரும் ஒருமுறை போனால் அது மிகப்பெரிய இழப்பு’ என்றார். ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி பெண்.

தவான் மற்றும் ஆயிஷா நீண்ட நாட்களாக டேட்டிங் செய்தபிறகு கடந்த 2012 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இது ஆயிஷாவுக்கு 2வது திருமணம் என்பதும், ஏற்கனவே 2 மகள்களும் இருந்தனர். ஆயிஷா, தவானை திருமணம் செய்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு ஜோராவர் என்ற மகன் பிறந்தார். இவர்களது குடும்ப வாழ்க்கை கடந்த 2020ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு பிரிந்து வாழ்கின்றனர். ஜோராவர், தனது தாயுடன் வசித்து வருகிறார். அவ்வபோது தவான், தனது மகனை சந்தித்து வருகிறார். மேலும், தவான், 2 மகள்களை கவனித்தும் வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: