அதிமுக பொதுக்குழு முடிவு: டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு முடிவு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆவணங்களை சமர்ப்பித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ததற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். பொதுக்குழுவை கூட்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவின் இருதரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்பட்டது. தென்னரசுவை வேட்பாளராக ஏற்க மறுத்து அவைத் தலைவர் அனுப்பிய படிவத்தை பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்திருந்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு முடிவு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆவணங்களை சமர்ப்பித்தார். அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2,665, அதில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். பன்னீர்செல்வம் தரப்பில் 128 பேர் படிவங்களை பெற்றிருந்த நிலையில், ஒருவர் கூட படிவத்தை தென்னரசுக்கு எதிராக அவைத் தலைவரிடம் வழங்கவில்லை.

பொதுக்குழு உறுப்பினர்களில் 15 பேர் மறைவு; 2 பேரின் பதவி காலாவதியாகிவிட்டது; 2 பேர் மாற்றுக்கட்சியில் ஐக்கியமாகிவிட்டனர் என கூறப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒப்புதல் படிவம் 17 பேருக்கு சென்று சேரவில்லை என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு தெரிவித்திருப்பதால் இரட்டை இலை சின்னம் பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிமுக கடிதத்தின் மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories: