ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு ஊராட்சியில் நம் வீடு, நம் தோட்டம் திட்டத்தில் பொதுமக்களுக்கு 14,212 செடிகள்-கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு ஊராட்சியில் நம் வீடு நம் தோட்டத்தின் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 212 பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு வழங்கினார்.ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை  பசுமையான கிராமமாக மாற்றும் நடவடிக்கைகள் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நம் வீடு நம் தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி கிராமங்களை பசுமையாக மாற்றும் நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வாலாஜா ஒன்றியம் செங்காடு ஊராட்சி நம் வீடு, நம் தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல மரச் செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 324 வீடுகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு எலுமிச்சை செடி, கருவேப்பிலை, கொய்யா, சப்போட்டா, சாத்துகுடி, சிறுநெல்லி, செவ்வாழை, பப்பாளி, மல்லிப்பூ செடி, மாஞ்செடி, முருங்கை, சீதாப்பழம், காட்டு நெல்லி, பலாச் செடி உள்ளிட்ட 14 வகையான செடிகளை வழங்கினார்.

மேலும், 15 மகாகனி மரக்கன்றுகளை 15 குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 323 வீடுகளுக்கு மொத்தம் 14 ஆயிரத்து 212 ஊட்டச்சத்து செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், செங்காடு ஊராட்சி மன்ற  தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சாந்தி சேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: