ரயில்வே வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.68 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல் சிக்கியது: கோவையை சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் கைது

டெல்லி: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த கோவை சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களை அணுகிய முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி அவர்களை டெல்லி அழைத்து சென்று கும்பல் ஒன்றுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். 28 தமிழக இளைஞர்களிடமிருந்து மொத்தம் ரூ.2.68 லட்சம் பணத்தை பெற்று கொண்ட கும்பல் அவர்களுக்கு போலி நியமன ஆணைகளையும் வழங்கியது.

பின்னர், அவர்களை டெல்லி ரயில் நிலையத்துக்கு அழைத்து சென்ற கும்பல் பயிற்சி என்ற பெயரில் ரயில்களை எண்ண சொல்லிவிட்டு தலைமறைவாகி விட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அடுத்து அவர்களை அறிமுகம் செய்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமியை இளைஞர்கள் முற்றுகையிட்டனர். ஏமாற்றியவர்கள் மோசடி கும்பல் என்பதை அறிந்திராத சுப்புசாமி இதுகுறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்தார்.

தீவிர விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் டெல்லியில் பதுங்கி இருந்த கோவையை சேர்ந்த 67 வயது சிவராமன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் பேரில் டார்ஜிலிங்கில் மறைந்து இருந்த விகாஸ் ராணா என்பவரும் பிடிப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரிடம் தீவிர விசாரணை செய்து வரும் டெல்லி போலீஸ் மோசடி கும்பலின் தலைவனான டெல்லி உத்தம் நகரை சேர்ந்த சத்யேந்தர் துபே மற்றும் ராகுல் சவுத்ரி   ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றது.

Related Stories: