டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் இன்று அறிக்கை தாக்கல்

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தென்கிழக்கு  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முன்தினம் வரை காவிரி  டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2.28 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள்  பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கோரிக் கையைஏற்று பயிர் சேதங்களை பார்வையிட  அமைச்சர்கள் குழுவை அனுப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  முன்தினம் அறிவித்தார்.

அதன்படி டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்  செல்வம் தலைமையில் ஒரு குழுவும், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்னொரு  குழுவும் தனித்தனியாக ஆய்வு பணியில் ஈடுபட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியில் மழையால் சாய்ந்த நெற்பயிர்களை  அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர்  ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அவர்களிடம் சேத விவரங்களை  கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்துக் கூறினார். விவசாயிகளும் சேத விவரங்களை கணக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் இழப்பீடு வழங்க  வலியுறுத்தினர்.

மேலும், உக்கடையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் ஆய்வு செய்தனர். பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலும் ஆய்வு செய்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம்  திருமருகல் மற்றும் வேளாங்கண்ணி, தலைஞாயிறு, மயிலாடுதுறை மாவட்டம்  வில்லியநல்லூர், செங்கைநல்லூர், பழைய கூடலூர், நல்லாடை பகுதிகளில்   அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு  மேற்கொண்டனர். இது குறித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில்,  சென்னையில் 5ம் தேதி (இன்று) நடைபெறும் கூட்டத்தில் பயிர் சேத விவரங்கள் குறித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்தார்.

* ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் நிலையம் செயல்படும்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மூணாம் சேத்தி கிராமத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டியில், டெல்டா  மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக  பெய்த கனமழை காரணமாக  பயிர்கள் மிகவும் பாதிப்படை ந்துள்ளது.  17 சதவீதம்  ஈரப்பதம் உள்ள  நெல் கொள்முதல் செய்து வந்த நிலையில் அதனை 22 சதவீதமாக உயர்த்த  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது 19 சதவீதம் ஈரப்பதம் உள்ள  நெல்லையும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.  ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல்  செய்ய அறிவுறுத்தி உள்ளோம். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள்  நடந்து, விவசாயிகள் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால்  சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: