கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம்: நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளின் பெயர்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரைகள் குறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம் செய்து வருகிறார்.மேலும் கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமலும் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே கவுல், ஓ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ,‘‘உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பான நியமன உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஒன்றிய அரசு தாமதிக்கிறது. இது மிக முக்கியமான விவகாரம். இந்த விவகாரத்தில் சங்கடமான ஒரு நிலையை எடுக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்’’ என்றனர்.அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கூறுகையில்,‘‘கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் பெயர்களுக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும்’’ என தெரிவித்தார்.

Related Stories: