இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு இரட்டை இலை கிடைக்குமா? முடக்கமா? அப்செட்டில் இபிஎஸ்; இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்; முடிவு தேர்தல் அதிகாரி கையில்

சென்னை:  எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதால், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா அல்லது முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட கடந்த 31ம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தான் உள்ளேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியோ, கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக நான் (எடப்பாடி) தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அதனால், நான் தான் ஒரிஜினல் அதிமுக என்று எடப்பாடி கூறி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் இன்று (3ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

கட்சியின் சின்னத்தை அங்கீகரிக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் ‘பி’ பார்மை எடப்பாடி அணியினர் இன்று தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. வேட்பு மனு பரிசீலனையின்போது அதாவது வருகிற 8ம் தேதி இரு அணிகள் சார்பில் ‘பி’ பார்ம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக  ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக  இருந்தது. ஆனால், அது திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்காக இடைக்கால பொதுச்செயலாளரான தன்னுடைய கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட்டு இருந்தார். இதுதொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்’ என தெரிவித்து உள்ளது. இது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது’ என தேர்தல் ஆணையம் கைவிரித்ததால் எடப்பாடி கடும் அப்செட்டில் உள்ளார். அதிமுகவை பொறுத்தவரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே ஏற்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் சூசகமாக தெரிவித்து உள்ளது. இதில், எடப்பாடிக்குத்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அவர் ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளார். இதனால், அவரால் ‘பி’ பார்மில் கையெழுத்திட முடியுமா என தெரியவில்லை. இதன் காரணமாக இரட்டை சிலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவுதான். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் கையெழுத்திட்டால் இரட்டை இலை வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தவில்லை. இதனால், ஓபிஎஸ்சும் இடியாப்ப சிக்கலில் மாட்டி உள்ளார்.

இரட்டை இலை சின்னம்  கிடைக்குமா அல்லது இரு அணி வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை கொடுக்கப்படாமல் முடக்கப்படுமா என்பது இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில்தான் தெரியவரும்.  அதனால், இரண்டு அணி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தாலும், வருகிற 8ம் தேதி வேட்புமனு பரிசீலனையின்போது ‘பி’ பார்ம் வழங்கலாம் என்று காத்திருக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து முடக்கும் நிலைக்கு தள்ளி விட்டார்களே என்று அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே ஏற்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

* அண்ணாமலை காரணமா?

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வரை உச்ச நீதிமன்றத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது. அதே நேரம் இரண்டு அணிகளும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை சந்தித்து தங்கள் அணி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டிருந்தனர். ஆதரவு கேட்டு 10 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் கூறாமல் அண்ணாமலை இழுத்தடித்து வருகிறார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இன்று (3ம் தேதி) வருவதாக இருந்தது. அதேநேரம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்று, பாஜ மேலிட தலைவர்களை சந்தித்துவிட்டு அன்றைய தினமே சென்னை திரும்பினார். இந்த சூழ்நிலையில்தான் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உச்ச நீதிமன்றத்தில், ‘எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கருத்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: