ரிசர்வ் வங்கி உத்தரவை தொடர்ந்து அதானி குழுமங்களுக்கு வழங்கிய கடன் விவரத்தை வெளியிடும் வங்கிகள்: முதலீட்டாளர்களுக்கு அதானி திடீர் விளக்கம்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி உத்தரவை தொடர்ந்து, அதானி குழுமங்களுக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்களை வங்கிகள் வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, எப்பிஓ பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற கவுதம் அதானி, இது குறித்து முதலீட்டாளர்களுக்கு திடீர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், நடத்திய ஆய்வில், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகளை செய்துள்ளதாகவும், அதன் மூலம் ₹17.80 லட்சம் கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளதாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. கடந்த 24ம் தேதி வெளியான இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அவரது சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தது. இதனால் அவரது நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதைத்தொடர்ந்து, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ், அதானி பங்குகளை ஈடாக பெற்று கடன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

பங்குகள் மதிப்பு அதலபாதாளத்துக்கு வீழ்ச்சி, உலக பணக்காரர் பட்டியலில் பின்தங்கியது என அடுத்தடுத்து அதானிக்கு சோதனைகள் வந்த நிலையில், அடுத்த பேரிடியாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு அமைந்துள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகள், வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கப்பட்டுள்ளன. கடன் வாங்கியபோது ஈடாக வழங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் வங்கி பங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்களை சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி, வங்கிகள் இந்த விவரங்களை சமர்ப்பித்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ₹21,300 கோடிக்கும் மேல் அதானி நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளது.

மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாங்க் ஆப் பரோடா ₹7,000 கோடியும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. எல்ஐசி நிறுவனம் ₹36,474.78 கோடியை அதானி நிறுவனங்களின் கடன் பத்திரம் மற்றும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, அதானி என்டர்பிரைசசின் பங்கு மதிப்பு நேற்று மீண்டும் அதிரடியாக வீழ்ச்சி அடைந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 26.5 சதவீதம் சரிந்து நேற்றை வர்த்தக முடிவில் ₹1,564.70 ஆக இருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, கடன் வழங்கிய வங்கிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனால், கடன் தொகையை மீட்க பங்குகளை விற்றாலும், அசலை கூட  மீட்க முடியாத நிலை வங்கிகளுக்கு ஏற்படலாம் என சந்தை நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனிடையே அதானி குழுமம் தனது  எப்பிஓ எனப்படும் தொடர் பங்கு வெளியீட்டின் மூலமாக ₹20 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் பங்கு விற்பனையை  திரும்ப பெறுவதாக அதானி என்டர்பிரைசஸ் அறிவித்தது.  பங்கு விற்பனை திரும்ப பெறப்பட்டு முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் கவுதம் அதானி அறிவித்தார். இது தொடர்பாக நேற்று முதலீட்டாளர்கள் இடையே பேசிய கவுதம் அதானி, \\” எப்பிஓ பங்குகள் திரும்ப பெறப்பட்ட முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். ஆனால் சந்தையில் காணப்பட்ட ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொண்டு, இந்த பங்கு விற்பனையை தொடர்ந்து மேற்கொள்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என்று வாரியம் உணர்ந்தது. எனவே தான் பங்கு விற்பனை திரும்ப பெறப்பட்டது. இந்த முடிவு தற்போதுள்ள செயல்பாடுகள், எதிர்கால திட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திட்டங்களை சரியான நேரத்தில்  செயல்படுத்துதல் மற்றும் வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். நிறுவனத்தின் அடிப்படையானது மிகவும் வலுவானது” என்றார்.

Related Stories: