ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேலூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வேலூர் சென்றுள்ளார். நேற்று காலை 9.40 மணியளவில் சென்னையில் இருந்து சாய் நகர் ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவர், காட்பாடிக்கு மதியம் 12.15 மணிக்கு வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆர்.காந்தி, மகேஷ்பொய்யாமொழி, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்பிக்கள் கதிர்ஆனந்த், ஜெகத்ரட்சகன், எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர்.

ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்களின் வரவேற்பை கொடுத்தனர். பின்னர், காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு வந்தார். அங்கு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடியில் மாநிலம் முழுவதும் 196 சட்டமன்ற தொகுதிகளில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 5,351 புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 55 பள்ளிகளில் ரூ.15.98 கோடியில் 114 வகுப்பறைகள் கட்டும் திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பேசியதாவது: பேராசிரியர் க.அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாழடைந்து இருக்கிற பள்ளி கட்டிடங்களை, பழுதடைந்த வகுப்பறைகளை சீர்செய்யவும், புதுப்பிக்கவும் வேண்டி இத்திட்டம்   உருவாக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இன்று மட்டும் இத்திட்டம் மூலமாக ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5,351 புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டி அதை நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். அதிலும் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.15 கோடியே 96 லட்சத்தில் 114 வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குறிப்பிடுவது உண்டு. எனது தலைமையிலான அரசை பொறுத்தவரை கல்வி, மருத்துவம் இவை இரண்டும் இரண்டு கண்களாக பாவித்து வருகிறோம் என்று சொல்வதுண்டு. அதன் அடிப்படையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக ெபாறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போது பள்ளிகளுக்கும் செல்வதுண்டு.

அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் காலையிலேயே உணவருந்தாமல் வருவதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி, மதிய உணவு திட்டத்தை போன்று காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து கடந்த செப்டம்பர் 15ம்தேதி அண்ணா பிறந்த நாளன்று பல மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக இத்திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல் பல பள்ளிகளில் வகுப்பறைகள் பழுதடைந்தும், வகுப்பறைகளே இல்லாமல் மரத்தடிகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலையை அறிந்து, அதை சீர் செய்வதற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். எனவே, இத்திட்டத்தை மாணவ செல்வங்கள் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* முதல்வருக்கு நன்றி கூறிய மாணவர்கள்

காட்பாடி அரசு பள்ளி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, வேனில் புறப்பட்டு சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பள்ளி மாணவர்களை பார்த்து வாஞ்சையுடன் கை அசைத்தார். அதனைப்பார்த்து உற்சாகமடைந்த மாணவர்கள், ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் க.அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்ததற்காக காணொலியில் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: