2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி

2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான மூலதன செலவினங்களுக்காக ரூ.1.62லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ஆவணங்களின்படி சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கிய வருவய் செலவினங்களுக்காக ரூ.2,70,120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திற்கான மூலதன செலவு ரூ.8774 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சக ஓய்வூதிய செலவினத்துக்காக தனித்தொகையாக ரூ.1,38,205கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

* எரிசக்தி மாற்றத்திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு

பெட்ரோலிய அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எரிசக்தி நடைமுறைகள் மாற்றம், கார்பன் வெளியேற்ற தவிர்ப்பு நடைமுறைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய பசுமை வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை மூலதன முதலீடாக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். வரும் 2070ம் ஆண்டிற்கு பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் பசுமை வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

* ரூ.15.4 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு

2023-2024ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ரூ.15.4லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான நிதியாண்டில் மொத்த கடனாக பெற்ற ரூ.14.21லட்சம் கோடி கடனை காட்டிலும் இது அதிகமாகும். நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் பத்திரங்கள் மூலம் ரூ.11.8லட்சம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியானது சிறுசேமிப்பு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய தரவு நிர்வாக கொள்கை

* கேஒய்சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் திட்டத்தின் கீழ் தனிநபர் பற்றிய தரவுகள் வழங்குவதை எளிதாக்கும் வகையில் தேசிய தரவு நிர்வாக கொள்கை கொண்டுவரப்படும்.

* சிறந்த 3 கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்படும்.

* தேசிய வீட்டு வசதி வங்கி திட்டத்தின் கீழ் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி செயல்படுத்தப்படுவது போல் நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்.

* மருந்து துறையில் ஆய்வு அதிகரிக்கப்படும்

மருந்து துறையில் ஆராய்ச்சிக்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி ஆய்வகங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவ ஆராய்ச்சிக்களை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* 157 நர்சிங் கல்லூரிகள்

நாடு முழுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 157 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களின் அருகே  157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.

2047ம் ஆண்டுக்குள் சிக்கிள் செல் ரத்த சோகை நோயை ஒழிக்கும் நோக்கத்தோடு திட்டம் தொடங்கப்படும். பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பகுதிகளில் 0-40 வயதுக்குட்பட்ட 7 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்படும். ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியோடு ஆலோசனை வழங்கப்படும்.

Related Stories: