2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி, பெருநிறுவன வரி ரூ.18.23 லட்சம் கோடியை எட்டும்

அடுத்த நிதியாண்டில் பெருநிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி வருவாயில் 10.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு ரூ.18.23 லட்சம் கோடி கிடைக்கும் என்று அரசு கணித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீடுகளான ரூ.14.20 லட்சம் கோடியை விட, நேரடி வரி வருவாய் ரூ.16.50 லட்சம் கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் வசூல் ரூ.14.08 லட்சம் கோடியாக இருந்ததைக் காட்டிலும், நேரடி வரி வருவாய் 17 சதவீதத்திற்கு மேல் உயரும், பெருநிறுவன வரி மூலம் ரூ.8.35 லட்சம் கோடி வருவாய் வரும். அடுத்த நிதியாண்டில், 10.4 சதவீதம் அதிகரித்து 9.22 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

இந்த நிதியாண்டில் தனிநபர் வருமான வரி வசூல் ரூ.8.15 லட்சம் கோடியாக இருக்கும். அடுத்த ஆண்டு 10.4 சதவீதம் அதிகரித்து ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து 2.10 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.9.56 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில்  திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஜிஎஸ்டி வசூல் ரூ.8.54 லட்சம் கோடியாக இருக்கும். நேரடி மற்றும் மறைமுக வரிகளை எடுத்துக் கொண்டால், 2023-24ல் மொத்த வரி வசூல் 10.45 சதவீதம் அதிகரித்து ரூ.33.61 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-24 ஒரு ரூபாயில் வரவு செலவு (பைசாவில்)

* வரவு

1. கடன் மற்றும் இதர பொறுப்புகள் 34

2. ஜிஎஸ்டி, இதர வரிகள் 17

3. வருமான வரி 15

4. பெரு நிறுவன வரி 15

5. ஒன்றிய கலால் வரி 7

6. வரி அல்லாத வருவாய் 6

7. சுங்க வரிகள் 4

8. கடன் சாராத மூலதன வருவாய் 2

* செலவு

1. கடன்களுக்கான வட்டி  20

2. மாநிலங்களுக்கான வரி பங்களிப்பு 18

3. ஒன்றிய திட்டங்கள் 17

4. நிதி கமிஷன் மற்றும் இதர பரிமாற்றங்கள் 9

5. ஒன்றிய நிதி பங்களிப்பு திட்டங்கள் 9

6. இதய செலவினங்கள் 8

7. மானியங்கள் 7

8. ஓய்வூதியம் 4

9. பாதுகாப்பு 8

* இறக்குமதி கார்கள் கையை கடிக்கும்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட சொகுசு கார்களுக்கான சுங்க வரி உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்படி, ரூ.32 லட்சத்திற்கு கீழ் மதிப்புடைய 3000 சிசி பெட்ரோல் அல்லது 2500 சிசி திறன் கொண்ட டீசலில் இயங்கக் கூடிய முழுமையாக தயாரிக்கப்பட்ட இறக்குமதி வாகனங்களுக்கான சுங்கவரி 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல, ரூ.32 லட்சத்திற்கு அதிகமான விலை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சுங்க வரி 60ல் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பாதியளவு வெளிநாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு கொண்டு வரப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சுங்க வரி 30ல் இருந்து 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் உயர்மதிப்பு சொகுசு கார்களைத் தவிர பெரும்பாலான சொகுசு கார்கள் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படுவதால், இந்த வரி உயர்வானது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே சுங்கவரி உயர்த்தப்படுவதாக தொழில்துறையினர் கூறி உள்ளனர். அதே சமயம் பசுமை போக்குவரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கான லித்தியம், அயன் செல்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: