செங்கம் 13வது வார்டு பகுதியில் இறந்து கிடக்கும் பன்றிகளால் கடும் துர்நாற்றம்-பொதுமக்கள் காய்ச்சலால் பாதிப்பு

செங்கம் : செங்கம் 13வது வார்டு பகுதியில் இறந்து கிடக்கும் பன்றிகளால் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் டவுன் 13வது வார்டில் சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் மர்ம காய்ச்சலால் பன்றிகள் ஆங்காங்கே செத்து கிடக்கின்றன. கழிவுநீர் கால்வாய் ஒட்டிய பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறு இறந்து துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் கடந்த ஒரு வாரமாக 20க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளது. இறந்த பன்றிகளை உரிமையாளர்கள் சிலர், குடியிருப்பு பகுதி அருகே உள்ள விவசாய நிலங்கள், காலி வீட்டுமனைகளில் புதைத்து விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு துர்நாற்றம் வீசி அங்குள்ள ஜீவானந்தம் தெருவில் உள்ள பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதித்து வருகின்றனர். சிலர் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் சுற்றித்திரியும் வளர்ப்பு பன்றிகளின் இறப்பு எதனால் ஏற்படுகிறது என கண்டறிந்து, பன்றிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: