இந்திய அரசியலமைப்பின் கீழ் வராது பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை. அது இந்திய அரசியல் அமைப்பின் கீழ் வராது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில் 2020 மார்ச் மாதம் ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி’ அல்லது ‘பிஎம் கேர்ஸ்’ என்ற பெயரில் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடையாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.   

இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடை அளித்தனர். இதனிடையே, பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்டு வரும் நன்கொடை விவரம், கையிருப்பு நிதி, செலவழிக்கப்பட்ட நிதி உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், பிஎம் கேர்ஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும், பிஎம் கேர்ஸ் நிதி விவகாரங்கள் சுதந்திரமாக கையாளப்படுவதை உறுதி செய்ய அதை அரசியலமைப்பின்படி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் உத்தரவிடும்படி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு குறித்து பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் பிரதீப் குமார் வஸ்தவா டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ்சந்திர சர்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு நேற்று அளித்த பதில் விவரம் வருமாறு: பிஎம் கேர்ஸ் நிதி செயல்பாடுகளை ஒன்றிய அரசோ அல்லது மாநில அரசோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை. பிஎம் கேர்ஸ் பிஎம் கேர்ஸ் பொது தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்திய அரசியல் அமைப்பாலோ, ஒன்றிய மாநில அரசு சட்டங்களாலோ உருவாக்கப்படவில்லை. பிஎம் கேர்ஸ் பொது அறக்கட்டளை என்பதால் அது தகவலறியும் உரிமை சட்டத்திற்கான பொது அதிகாரத்தின் கீழ் வராது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் நிதி எவ்வாறு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற எந்த வித வழிமுறைகளும் இல்லை. பிற தனியார் தொண்டு நிறுவனங்களை போல பிஎம் கேர்ஸ் தொண்டு அமைப்புக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கும் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. அரசுகள் வழங்கும் நிதி ஏற்றுக்கொள்ளப்படாது. தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் அளிக்கும் நிதி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒன்றிய அரசின் பிரதமரின் தேசிய நிவாரண நிதி இணையதளத்தில் பயன்படுத்தப்படுவது போல பிஎம் கேர்ஸ் நிதி இணையதளத்திலும் இந்திய அரசின் முத்திரை, இந்திய அரசின் இணையதள பக்கம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது. இவ்வாறு ஒன்றிய அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

* இணையதளத்தில் தகவல்கள்

பிரதமர் அலுவலகத்தின் பிரமாண பத்திரத்தில் மேலும் கூறியிருப்பதாவது: பிஎம் கேர்ஸ் மூலம் சாதி, மதம், பாலினம், பகுதி, மொழி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அறக்கட்டளையின் பலன் பொது மக்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் பிஎம் கேர்ஸ் நிதியின் அறக்கட்டளை பத்திரம், நிதியிலிருந்து அனுமதிக்கப்பட்ட மானியங்கள் இணையதளத்தில் கிடைக்கும். பிஎம் கேர்ஸ் நிதியின் தணிக்கை அறிக்கைகள் ஏற்கனவே இணையதளத்தில் கிடைக்கின்றன. எனவே  பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தனது பணிகளை கவுரவ அடிப்படையில் நிறைவேற்றி வருகிறது.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: