பெண்கள் பாதுகாப்பு குறித்து சைக்கிள் பயணம் 7 மாநிலங்களை கடந்து ஆந்திரா வந்த இளம்பெண்-எஸ்பி வாழ்த்து

திருப்பதி : பெண்கள் பாதுகாப்பு குறித்து சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளம்பெண் 7 மாநிலங்களை கடந்து நேற்று ஆந்திரா வந்தார். உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு ‘இந்தியா’ என்பதை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆஷா மாளவியா என்பவர் கடந்தாண்டு நவம்பர் 1ம் தேதி போபால் பகுதியில் இருந்து சைக்கிள் மூலம் ‘பெண்களின் அதிகாரம்’ மற்றும் ‘பெண்கள் பாதுகாப்பு’ குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணம் கொண்டார்.

இந்நிலையில், நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதி வந்தடைந்தார். அவரை மாவட்ட எஸ்பி பரமேஸ்வர் வாழ்த்தி வரவேற்றார். தொடர்ந்து, திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் அவரை பாராட்டினார். அப்போது, எஸ்பி பரமேஸ்வர் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் ஆஷாமாளவிகா. இவர் தனது 3 வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தாயாரின் ஊக்கத்தால் சிறப்பாக படித்து உடற்கல்வியில் பட்டம் பெற்றார். மலையேற்றத்தில் சிறந்து விளங்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

உலகில் இந்தியாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 7 மாநிலங்களை கடந்து 8,200 கி.மீட்டர் பயணம் செய்துள்ளார். 91வது நாளாக இன்று(நேற்று) திருப்பதி வந்துள்ளார். பெண்கள் அனைத்து துறையிலும் சிறப்பாக முன்னேறி முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: