‘இந்தியா மீதான தாக்குதல்’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது: அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் குட்டு

புதுடெல்லி: ‘பங்குச்சந்தையில் மோசடி என வெளியான அறிக்கை இந்தியா மீதான தாக்குதல்’ என அதானி குழுமம் கூறிய குற்றச்சாட்டுக்கு, ‘தேசியவாதத்தால் மோசடிகளை மறைக்க முடியாது’ என ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி தந்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத மோசடிகளை செய்ததாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 24ம் தேதி அறிக்கை வெளியிட்டது. 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக பல்வேறு ஆதாரங்களை வெளியிட்ட அந்நிறுவனம், அறிக்கையில் 88 கேள்விகளை எழுப்பி இருந்தது.   இதன் காரணமாக பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

 

இந்த குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம் நேற்று முன்தினம் 413 பக்க அறிக்கையில் ஹிண்டன்பர்க் கேட்ட 88 கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தது. அதில், ‘ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. நாங்கள் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கூறுவதில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மறைமுக நோக்கத்துடனேயே ஹிண்டன்பர்க் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘ஷார்ட் செல்லர்’ ஆன ஹிண்டன்பர்க், மற்ற நிறுவனங்களின் பங்குகளை வீழ்ச்சி அடையச் செய்து, அதன் மூலம் லாபம் அடைவதை நோக்கமாக கொண்டிருக்கும் நிறுவனமாகும். இது இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்கள், வளர்ந்து வரும் தேசத்தின் மீதான கணக்கிடப்பட்ட தாக்குதல். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முழுக்க பொய்யே தவிர வேறொன்றுமில்லை’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கு நேற்று பதில் அளித்துள்ள ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அதானி குழுமம் தனது வளர்ச்சியையும், செல்வப் பெருக்கையுடன் இந்தியாவுடன் இணைக்க முயற்சித்துள்ளது. இதற்கு நாங்கள் உடன்படவில்லை. இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு. உற்சாகமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு. ஆனால் அதானி குழுமம் திட்டமிட்டு தேசத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. அதானி குழுமம் தனது மோசடிகளை தேசியவாதத்தால் மறைத்துக் கொள்ள முடியாது. தேசத்தை கொள்ளை அடித்து விட்டு, தேசியக்கொடியால் போர்த்திக் கொண்டு தப்பிக்க முடியாது. அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் எதிர்காலம் தடுக்கப்படுகிறது. இவ்வாறு தனது பதில் அறிக்கையில் பதிலடி தந்துள்ளது. இஸ்ரேலிலும் கால் பதித்தது: இஸ்ரேலில் தனியார் மயமாக்கப்பட்ட ஹைபா துறைமுகத்தை நிர்வாகிக்கும் ஒப்பந்தத்தை ரூ.10 ஆயிரம் கோடியில் அதானி குழுமம் பெற்றுள்ளது.  இன்று முறைப்படி கையகப்படுத்தும் விழாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பங்கேற்க உள்ளார்.

* ரூ.5 லட்சம் கோடி இழப்பு

பங்குச்சந்தையில் 3வது நாளாக நேற்றும் அதானி குழும பங்குகள் கடும் சரிவை கண்டன. கடந்த 3 நாளில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட இழப்பு 66 பில்லியன் டாலர், அதாவது ரூ.5.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் நிதி திரட்ட கடந்த வெள்ளிக்கிழமை 4.5 கோடி பங்குகளை அதானி குழுமம் விற்பனைக்கு வெளியிட்டது. இதில் இதுவரை 6.87 லட்சம் பங்குகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. அதாவது வெறும் 1.5% பங்கு மட்டுமே விற்றுள்ளது. இந்த விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது.

Related Stories: