அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சசிகலா மனுவை மாநகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு மனுவுக்கான நீதிமன்ற கட்டணத்தை சசிகலா செலுத்தவில்லை எனக்கூறி எடப்பாடி தரப்பில் செம்மலை மனுதாக்கல் செய்திருந்தார். உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தாத சசிகலா மனுவை தள்ளுபடி செய்யக்கோரி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தர், செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்தால், தன் தரப்பு வாதத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை வி.கே.சசிகலா தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: