மேகாலயா தேர்தலில் புது யுக்தி நட்சத்திர பேச்சாளர்கள், பேரணிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்: வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திக்க திட்டம்

ஷில்லாங்: மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர், பெரிய பேரணிகள் எதுவும் இன்றி காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி- பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும்  மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் பெரிய பேரணி  எதுவும் இன்றி புதிய அணுகுமுறையில் கட்சி தேர்தலை சந்திக்கிறது. அதற்கு பதில், வாக்காளர்களை நேரடியாக வீடு,வீடாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர் வின்சென்ட் எச்.பாலா கூறுகையில்,‘‘ காங்கிரஸ் வேட்பாளர்களில் 80 சதவீதத்தினர் புதுமுகத்தினர். நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை. வாக்காளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் விதமாக அவர்களின் வீட்டுக்கு  நேரடியாக செல்கிறோம். பெரிய அளவில் பேரணிகள் இல்லாமல் தொகுதி அளவில் சிறிய பேரணிகள் நடத்தப்படும்’’ என்றார். மேகாலயாவில் 30 ஆண்டுக்கும் மேல் நடந்த  தேர்தல்களை ஆய்வு செய்தவரான மனோஷ் தாஸ் கூறுகையில்,‘‘ இதர மாநிலங்களை விட மேகாலயாவில் நடக்கும் தேர்தல் வித்தியாசமானவை.

பெரிய பேரணிகள்,நட்சத்திர பேச்சாளர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே எப்பொழுதும் வெற்றி பெற்று வந்துள்ளனர்’’ என்றார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களை காங்கிரஸ் வென்றது. இதில் பெரும்பாலான எம்எல்ஏக்கள்,திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர்ந்தனர்.

Related Stories: