அலையாத்திக்காடு, கோடியக்கரையில் 1.30 லட்சம் அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு: ஆய்வு குழு தகவல்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரப்பளவு கொண்டதாகும். இப்பகுதிகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் 2 நாள் நடந்தது. 50 பேர் கொண்ட குழுவினர் அலையாத்திகாடு கடற்கரை சார்ந்த ஈரநில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில், ‘இந்த கணக்கெடுப்பு மூலம் முத்துப்பேட்டை பகுதியில் 102 அரியவகை பறவைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 30 ஆயிரம் பறவைகள் வரை இங்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டை விட இது குறைவுதான். பெரும்பாலான பறவைகள் முன்கூட்டியே இடம் மாறி சென்றுவிட்டது. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, சிறிய உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், நாமக்கோழி, நெடுங்கால் உள்ளான், நீர்காகம், ஐரோப்பியா கரண்டி வாயன், மடையான், ஆலா வகைகள் குறிப்பிட்டத்தக்கதாகும்’ என்று தெரிவித்தார். வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை , கடல் கலா, கடல் காகம் என 200க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இந்த ஆண்டு வந்து சென்றதாக தெரிய வருகிறது. இந்த ஆண்டு போதுமான மழையும், பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் தற்போது வரை வந்து சென்றதாகவும், இந்த ஆண்டு கடும்பணி பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்பி விட்டதாகவும் கோடியக்கரை வனத்துறையினர் அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Related Stories: