ஈரோடு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜ நிர்வாகிகளுடன் இன்று அண்ணாமலை ஆலோசனை: முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் பாஜவின் நிலைப்பாடு குறித்து, பாஜ மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தான் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் வேட்பாளரை நிறுத்த இருப்பதாக போட்டி போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதேநேரத்தில், அதிமுக விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இதனால், இரட்ைட இலை சின்னம் கிடைக்குமா என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிட எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை களம் இறக்க ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என யாருக்கும் ஆதரவை தெரிவிக்க முடியாமல் பாஜ திணறி வருகிறது.

இந்த நிலையில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுக்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதற்காக, இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமையகமான கமலாலயத்தில், மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் போட்டியிடுவதால் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடுநிலை வகிப்பதா என்பது குறித்து கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ் என யாருக்கும் ஆதரவை தெரிவிக்க முடியாமல் பாஜ திணறி வருகிறது.

Related Stories: