இஸ்ரேலில் பதற்றம் மதவழிபாட்டு தலத்தில் 7 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: இஸ்ரேலில் மதவழிபாட்டு தலத்தில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் மேற்கு கரை ஜெனின் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது வெடித்த வன்முறையில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  கிழக்கு ஜெருசலேமின் வடக்கு பகுதியில் உள்ள மதவழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனிய நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். மதவழிபாட்டு தலத்துக்கு காரில் வந்த மர்மநபர் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் 7 அப்பாவி இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் கிழக்கு ெஜருசலேமை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

மேலும் காரில் இருந்து இறங்கிய அவர், அங்கிருந்து தப்பிசெல்ல முயன்ற அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியபோது சுட்டுக்கொல்லப்பட்டான். சம்பவ இடத்தை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘‘கடந்த பல ஆண்டுகளில் நாம் அறிந்த மிக பயங்கரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டுகிறேன். உறுதியுடன் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் சட்டத்தை தங்களது கைகளில் எடுக்க கூடாது” என்றார். இந்த சம்பவங்களை தொடர்ந்து இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளது. துப்பாக்கி சூட்டில் இஸ்ரேலை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: