31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து பட்ஜெட் கூட்டத்தில் குரல் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இந்தியா - சீன எல்லையான யாங்ஸ்டே செக்டரில் உள்ள  அருணாச்சலத்தின் தவாங் பள்ளத்தாக்கில், இருநாடுகளின் வீரர்கள் மோதிக்கொண்டனர். அதனால் இரு தரப்பு பாதுகாப்புப் படையினருக்கும் சிறு  காயங்கள் ஏற்பட்டன. இவ்விவகாரம் குறித்தும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனாவின்  ஆக்கிரமிப்பு குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளதால், இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இதுகுறித்து காங்கிரசின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் மொத்தமுள்ள 65 ரோந்து பாயிண்டுகளில் 26 ரோந்துப் புள்ளிகளில் பாதுகாப்பு படை நிலை நிறுத்தப்படவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

அதனால் அந்தப் பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்து வருகிறது. மிக உயர்ந்த சிகரங்களில் உயர்ரக கேமராக்களை வைத்து இந்தியப் படைகளின் நடமாட்டத்தை சீனப் படைகள் கண்காணித்து வருகின்றன. சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு விஷயத்தில், ஒன்றிய அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அதனை முறியடிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: