சர்ச்சை கவர்னர் வெளியேற விரும்பியதால் மகாராஷ்டிரா புதிய ஆளுநராக அமரீந்தர் சிங் நியமனம்?.. காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியவருக்கு பரிசு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில ஆளுநரான பகத்சிங் கோஷியாரி, சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கிவருகிறார். குறிப்பாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால், மாநில பாஜக தலைவர்களால் ஆளுநர் கோஷியாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க முடியவில்லை. சில பாஜக தலைவர்களே பகத்சிங் கோஷியாரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி மும்பை வந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் கோஷியாரியும் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோது தன்னை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். எஞ்சிய காலத்தில் புத்தகம் எழுதியும், குடும்பத்துடனும் கழிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்த செய்திகள் வெளியானவுடன் ஆளுநரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பதவிக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்கை நியமிக்க ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.

கடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து, தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு அவரும் பாஜகவில் சேர்ந்துவிட்டார். மேலும் அவர் தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: