தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கையில் சட்டப்பிரிவு 13ஏ முழுமையாக அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் தகவல்

கொழும்பு: இலங்கையில் ``தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் 13ஏ சட்டப்பிரிவு முழுமையாக அமல்படுத்தப்படும்,’’ என்று அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி இலங்கைக்கு கிடைக்க இந்தியா உத்தரவாதம் அளித்தது. இதற்காக கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிபர் ரணிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது, இலங்கையில் தமிழர்களின் அரசியல் சுயாட்சியை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு தலைமையேற்று பேசிய அதிபர் ரணில், ``அதிபராக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு உள்ளது. அதன்படி, இலங்கையில் தமிழர்களின் அரசியல் சுயாட்சிக்கு அதிகாரம் வழங்கும் 13ஏ சட்டப்பிரிவு முழுமையாக திருத்தங்கள் இல்லாமல் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். இதனை முழுமையாக அமல்படுத்த யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அச்சட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும்,’’ என்று தெரிவித்தார்.

இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்கள் மீது 1987ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது, இந்தியா நேரடியாக தலையிட்டதன் கீழ், 13ஏ சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இந்திய பிரதமராக ராஜிவ் காந்தி, இலங்கை அதிபராக ஜேஆர். ஜெயவர்த்தன இருந்த போது, இந்தியா-இலங்கை இடையே கடந்த 1987ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, மாகாண கவுன்சில் அமைக்கும் திட்டம் இடம் பெற்றது.

Related Stories: