பூதப்பாண்டி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூதப்பாண்டி: பூதப்பாண்டி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமியம்மள் கோயிலில் கடந்த 22ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள‌ இசை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா  துவங்கியது. இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடந்தது. 23ம் தேதி முதல் நேற்று இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை கிரிய  பூஜையும், 6.30 மணிக்கு யாத்ரா தானமும் நடைபெற்றது. 8 மணியளவில் மதுரை பிச்சைய்யா சிவாச்சாரியார் தலைமையில் தூத்துக்குடி செல்வம் பட்டர், பூதப்பாண்டி சிவசுப்பிரமணிய நம்பியார், வடிவீஸ்வரம் மணி நம்பியார், விக்னேஷ் சிவா ஆகியோர் இணைந்து கும்பாபிஷேகத்துக்கான புனித நீர் எடுத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள 5 ராஜ கோபுர கும்பங்கள், 5 சால கோபுர கும்பங்கள் 3 அம்பாள் மற்றும் 3 சாஸ்தா கோபுர கும்பங்கள், உற்சக மூர்த்தி, பிள்ளையார் மற்றும் முருகர் ஆகியவை தலா ஒரு கும்பம் என மொத்தம் 19 கும்பங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தானம் மற்றும் பரிவார ழூர்த்திகளுக்கு மஹா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக தீபாராதனையும், 10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு மஹா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை சுமார் 6 மணிக்குக்குள் திருக்கல்யாண வைபோக மூகூர்த்தமும், இரவு 7 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும், பின்னர் பஞ்சமூர்த்தி தரிசனம் உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் எம்ஆர் காந்தி எம்.எல்.ஏ, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். குமரி கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் அணில் குமார், வார்டு கவுன்சிலர்கள் மரிய அற்புதம், ஈஸ்வரி, கலா, நபிலா, அசாரூதீன், யூனுஸ் பாபு, முருகன் பிள்ளை, டதி செல்வபாய், ஹெலன் சுலோச்சனா பாய், ஜெஸி தம்பி, முத்து லெட்சுமி, உஷா பகவதி, மெர்ஸிபாய் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: