சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகளை ஏலம் விட சிறப்பு வக்கீல் நியமனம்: பெங்களூரு கோர்ட் உத்தரவு

பெங்களூரு: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக கருவூலத்தில் வைத்துள்ள சேலைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட சிறப்பு அரசு வக்கீல் நியமனம் செய்ய அரசுக்கு பெங்களூரு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குறிப்பாக கடந்த 17 வருடங்களாக கர்நாடக கருவூலத்தில் உள்ள சேலைகள் காலணிகள், சால்வைகள் போன்றவை வீணாகி வரும் 27 வகையான பொருட்களை மட்டும் ஏலம் விட்டு அதில் வரும் நிதியை கொண்டு சொத்து குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி கடந்தாண்டு ஜூன் 22ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி ராமச்சந்திர டி.ஹுத்தார் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது தான். உடனடியாக கர்நாடக அரசு மற்றும் நீதித்துறை சிறப்பு வக்கீலை நியமித்து அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு உடனடியாக செயல்பட்டு, கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை ஏலத்தில் விற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

11,344 சேலைகள்; 750 ஜோடி செருப்பு

கருவூலத்தில் உள்ள பொருட்கள்

பொருட்கள்    எண்ணிக்கை

1. உயர்ரக புடவைகள்    11,344

2. ஏ.சி. மெஷின்    44

3. டெலிபோன்    33

4. சூட்கேஸ்    131

5. கைக்கடிகாரம்    91

6. சுவர் கடிகாரம்    27

7. மின்விசிறி    86

8. அலங்கார இருக்கைகள்    146

9. டீப்பாய்    34

10. டேபிள்    31

11. கட்டில்    24

12. டிரஸ்சிங் டேபிள்    9

13, அலங்கார விளக்கு    81

14. சோபா செட்    20

15. காலணிகள்    750

16. கண்ணாடிகள்    31

17. கிறிஸ்டல் கண்ணாடிகள்    215

18. இரும்பு பெட்டகம்    3

19. சால்வைகள்    250

20. குளிர்சாதன பெட்டி    12

21. ரொக்கம்    ரூ.1,93,202

22. டிவி    10

23. விசிஆர்    8

24 வீடியோ கேமரா    1

25. சி.டி. பிளேயர்    4

26. ஆடியோ டெக்    2

27. டேப்ரிக்கார்டர்    24

28. கேசட்கள்    1040

Related Stories: