ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு; 3 நீதிபதிகள் அமர்வுக்கு விரைவில் ஒப்புதல்: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: கடந்தாண்டு பிப். 5ம் தேதி கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்த‌து. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையே இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, ‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே, கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உட்பட 24 பேர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் தீர்ப்பை வெளியிட்டனர். அதன்படி நீதிபதி ஹேமந்த் குப்தா, ‘ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத நடைமுறையா என்பன உள்ளிட்ட 11 கேள்விகளை முன்வைத்து விசாரணை நடைபெற்றது. இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் மேல்முறையீட்டு மனுக்கள் எதிரானவை. எனவே, அவற்றைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று தீர்ப்பளித்தார்.

மற்றொரு நீதிபதி சுதான்ஷு துலியா, ‘ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக‌ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறேன். ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லாது. ஹிஜாப் அணிவ‌து அவரவர் தேர்வு. எனவே, கர்நாடக அரசு ஹிஜாபை தடை செய்வதாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்கிறேன்’ என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து இரு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், அவர்கள் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தனர். இந்நிலையில் இன்று மேற்கண்ட வழக்கு விவகாரம் ெதாடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வின் முன்னிலையில், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா ஆஜராகி, ‘ஹிஜாப் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமிக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ‘மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு விரைவில் உத்தரவிடப்படும். மனுதாரர்கள் உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகி உரிய முறையீடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: