ஈரானில் வரும் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெஹ்ரான்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய போது, மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பலியானார். அவருடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதிபர் ரைசி மரணத்தை தொடர்ந்து 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக உச்ச தலைவர் காமனெயி அறிவித்துள்ளார்.

மசூதிகளில் கறுப்பு கொடி ஏற்றி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதிபர் ரைசி மறைவால் ஈரான் மக்கள் கடும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஈரான் அதிபர் மறைவுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. ஈரான் அரசியலமைப்பின்படி, அதிபர் இறந்தாலோ அல்லது பதவியை விட்டு வெளியேறினாலோ, அடுத்த தேர்தல் நடக்கும் வரை துணை அதிபர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார். அதன்படி, தற்போதைய துணை அதிபர் முகமது முக்பரை இடைக்கால அதிபராக உச்ச தலைவர் காமனெயி நேற்று அதிகாரப்பூர்வமாக நியமித்தார்.

முகமது மொக்பர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஈரான் சட்டப்படி நீதித்துறை தலைவர், சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி அனுமதி அளித்தவுடன் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

The post ஈரானில் வரும் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: