5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

மும்பை: ஐந்தாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்குவங்கத்தில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5, ஜார்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் பேரவைக்கு நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டாம் கட்டமாக 35 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குச் சென்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குச்செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஐந்தாம் கட்டத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 8.95 கோடி பேர்; இவர்களில் பெண்கள் 4.26 கோடி பேர். மொத்தம் 94,732 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9.47 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தேர்தல்களில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் (சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்) இதுவரை 379 இடங்களுக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது.

இன்றுடன் 49 தொகுதிகளையும் சேர்த்தால் 428 தொகுதிகளில் தேர்தல் முடிவடைகிறது. மக்களவைக்கான 6, 7ம் கட்ட வாக்குப் பதிவுகள் வரும் 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

வாக்குப்பதிவு 5 மணி நிலவரம்
முற்பகல் 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 73 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 48.66 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. பிற மாநிலங்களில் உத்தர பிரதேசம் – 55.80 %, பீகார் – 52.35%, ஒடிசா – 60.55%, ஜார்கண்ட் – 61.90%, ஜம்மு-காஷ்மீா் – 54.21%, லடாக் யூனியன் பிரதேசம் – 67.15% என்ற அடிப்படையில் சராசரியாக 56.68% வாக்கு பதிவாகி உள்ளது.

காண்டே சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், மும்பையில் பாலிவுட் நடிகை ஷுபோ கோட்டே, பாரமுல்லாவில் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா, மும்பையில் நடிகர் அக்‌ஷய் குமார், தொழிலதிபர் அனில் அம்பானி, லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி,

பாந்த்ரா வெஸ்டில் திரைப்பட தயாரிப்பாளர் குணால் கோஹ்லி பாந்த்ரா, நடிகர் பரேஷ் ராவல், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், நடிகை சன்யா மல்ஹோத்ரா, நடிகை ஜான்வி கபூர், நடிகர் ராஜ்குமார் ராவ், வெர்சோவாவில் மல்யுத்த வீரர் சங்கராம் சிங், நடிகை பாயல் ரோஹத்கி, கோரேகானில் உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

The post 5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: