அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

சென்னை: கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மனிதனை மனிதனாக உயர்த்துவது கல்வி. மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கும் வலிமையான கருவி கல்வி. Education is a tool for Social Change என்று ஆங்கிலத்திலும் கூறுவர். அந்தக் கல்வி, வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் இட்டாலும் வேகாது; கள்வரால் கொள்ளையடிக்கவும் இயலாது; பிறர்க்குக் கொடுத்தாலும் குறையாது; எனக் கல்விச் செல்வத்தின் பெருமையை விவேக சிந்தாமணி பாடல் கூறும். எனவேதான், கல்வி வளர்ச்சிக்கு எல்லோரும் தொண்டு செய்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். கல்வி வளர்ச்சியில் தொடக்கக் கல்வி மிகமிக முக்கியமானது. அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது; அடித்தளம் வலுவாக இருந்தால்தான் அதன் மீது எழும்பும் கட்டடம் மிகவும் வலுவாக அமையும். அதுபோலத்தான் கல்வியின் ஆரம்பம்-தொடக்கம் சரியாக அமைந்து விட்டால் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதுவே குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். புதிய புதிய திட்டங்களைத் தந்து குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கற்கும் சூழ்நிலையை மேம்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியுள்ள திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதற்குத் துணை புரியும் திட்டங்கள் பல:

புரட்சிகரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
குழந்தைகள் காலையில் வீட்டில் உணவு உண்ணாமலேயே பள்ளிக்கு வருகிறார்கள் என்பதைப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் கூறக் கேட்டு அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக உருவாக்கிய

திட்டம் காலை உணவுத் திட்டம்.
முதலமைச்சரின் இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி. நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து 31,008 அரசுத் தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 18.54 இலட்சம் மாணவ, மாணவியர் இன்று பள்ளி வந்ததும் சூடான, சுவையான காலைச் சிற்றுண்டியை உண்டு படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சியோடு இத்திட்டத்தை வரவேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வாழ்த்துகிறார்கள். இத்திட்டத்தால் பள்ளிக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இத்திட்டத்தை, இந்தக் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2.50 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும், இத்திட்டம் இந்த ஆண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை மூலம் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் அவர்கள் இத்திட்டத்தை வரவேற்றுத் தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். உண்மையிலேயே முதலமைச்சர் அறிமுகப்படுத்திய இந்த மகத்தான திட்டம் கல்வித்துறை வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சித் திட்டமாகப் போற்றப்படுகிறது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலக் கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். மூன்று ஆண்டுகளாக ரூ.590.27 கோடியில் செயல்படுத்தி வரும் இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1.65 இலட்சம் தன்னார்வலர்கள் மூலம் 24 இலட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர்.

வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம்
கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்திடும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் அடங்கிய சிறு நூல்கள் மூலம் தொடர் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் தமிழ்நாடு முழுவதிலும் குந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றதைக் காண முடிந்தது. குழந்தைகளின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவற்றை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையங்களில் “குறும்படக் கொண்டாட்டம்” 2023 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடத்தப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்திலும் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

எண்ணும் எழுத்தும்
முதலமைச்சரால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது, எண்ணும் எழுத்தும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் 37,866 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 22‘.27 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

நுழை-நட-ஓடு-பற-திட்டம்
குழந்தைகள் அணுகக்கூடிய எளிய மொழியில் புத்தகங்களின்மேல் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஈடுபடுத்தும் வகையில் வண்ணப்படங்களுடன் நுழை நட, ஓடு, பற என நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகள் கொண்டதாக 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து, 50 புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் பல வண்ணப் படங்களுடன் குழந்தைகள் கண்டதும் ஆர்வத்துடன் புத்தகங்களைக் கையில் எடுக்கத் தூண்டும்வண்ணம் அமைந்துள்ளன.

காடு / மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி
காட்டுப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் பள்ளிகளுக்குச் சென்று வருகின்ற குழந்தைகளுக்கு ஆபத்தான பல சிரமங்கள் உள்ளன. அந்தச் சிரமங்கள் அனைத்தையும் நீக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். 2023-24 ஆம் ஆண்டில் தொலைதூர / அடர்ந்த காடு / மலைப் பகுதிகளில் உள்ள 1692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்கநிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகளையும் ஏற்படுத்தினார்கள். இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு வந்து பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
முதலமைச்சர் நல்ல வகுப்பறைச் சூழ்நிலைகள் குழந்தைகளின் படிப்பார்வத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதைக் கருதி, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) ரூ..435.68 கோடிசெலவில் அமைத்துள்ளார்கள்.
மேலும், அனைத்து அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் 100 Mbps அதிவேக இணைய இணைப்பைப் பெறவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 இலட்சம் ரூபாய்ச் செலவில் கைக் கணினிகள் (Tablet) வழங்க ஆவன செய்துள்ளார்கள்.

மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம்
முதலமைச்சர் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் தனி கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப் படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் “நலம்நாடி” என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்பண்புகளை வளர்க்கும் கதை நூல்கள்
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களிடம் நற்பண்புகளை வலுப்படுத்துதல் பொருட்டு கதை மையங்களை ஏற்படுத்தி 160 பள்ளிகளில் ரூ.121.75 இலட்சம் செலவில் கதை நூல்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
முதலமைச்சர் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாக ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டதை உருவாக்கியுள்ளார்கள். இந்தத் திட்டத்தின்கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கென ரூ.1,887கோடியே 76 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெறுகின்றன.

ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 3374 வகுப்பறை கட்டடங்களும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 227 வகுப்பறைக் கட்டடங்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென மொத்தம் ரூ.667 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர்கள் நியமனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களும் நாடும் அரசுப் பள்ளிகளின் கல்விப் பணிகள் தடையின்றிச் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு வழங்கியுள்ள அறிவுரைகள்படி 4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5.154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கற்பித்தல் பணி தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 76 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது
விருது வழங்கிப் பாராட்டுவது எல்லோரையும் மகிழச் செய்யும், எல்லோரையும் மேலும் சிறப்பாகப் பணி செய்யத் தூண்டும். எனவே ஆண்டுதோறும் அரசின் திட்டங்கள் அனைத்தையும் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவேதான், கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்து விளங்குகிறது மு.க.ஸ்டாலின் அனைவராலும் பாராட்டப்படுகிறார்கள். இது பள்ளிக் கல்வித்துறையில் ஒரு புதிய சாதனையாகும்.

The post அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: