பட்ஜெட் தொடரை தொடங்கி வைத்து புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையா?: மக்களவை சபாநாயகர் விளக்கம்

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்தப்படுமா என்பது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி, இந்த ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தப் போவதாக செய்திகள் வெளியாகின. தற்போதைய நாடாளுமன்றத்தின் அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் மார்ச்சில் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி உரை தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று தனது டிவிட்டரில், ‘பட்ஜெட் தொடரின் போது, இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி, தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திலேயே உரையாற்றுவார்’ என விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2ம் கட்ட அமர்வு வரும் மார்ச் 13ம் தேதி நடக்கிறது. 2ம் கட்ட தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: