ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆகியோர் வாதத்தில், புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் டிஜிட்டல் ஆதாரங்கள் அழித்தது மற்றும் ரூ100கோடி பண பரிவர்த்தனை கெஜ்ரிவால் செய்தமைக்கான ஹவாலா ஆதாரங்கள் உள்ளது.

மதுபானக் கொள்கை திட்டத்தில் விற்பனையாளர் லாபம் மட்டுமே சுமார் 590கோடி கிடைத்துள்ளது. தேர்தலில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்யாவிட்டல் வானம் இடிந்து விழுந்துவிடும் என்பது போன்று அவரது தரப்பில் சித்தரிக்கிறார்கள். தேர்தலை அடிப்படையாக கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கலாம் என்றால், சிறையில் இருக்கும் பல அரசியல் வாதிகளுக்கு வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். என்று தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மதுபானக் கொள்கை விவகாரத்தில் முதலில் அமலாக்கத்துறை ரூ100கோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதாயம் கிடைத்ததாக தெரிவித்தது. ஆனால் தற்போது ரூ1100கோடி என்று தெரிவிக்கிறது.

இதில் எந்த தொகை சரியானது. அதனை முதலில் தெளிவுப்படுத்துங்கள். ஒரு முக்கியமான வழக்கில் இதுபோன்று தான் முன்னுக்கு பின் முரணாக விளக்கம் அளிப்பீர்களா. அப்படியே இருந்தாலும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் இவ்வளவு தொகை வித்தியாசம் எப்படி வந்தது. மேலும் ஒரு வழக்கை இரண்டு வருடமாக விசாரித்ததாக தெரிவிக்கிறீர்கள், இதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புக்களுக்கு இது சரியான ஒன்று கிடையாது. எதிலும் ஒரு தெளிவு வேண்டும். அப்போது தான் உங்கள் மீது நம்பிக்கை வரும். குறிப்பாக கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். கெஜ்ரிவாலை பொறுத்தமட்டில் அவர் ஒன்றும் ஒரு தொடர் குற்றச்செயல்கள் புரிபவர் கிடையாது. அப்படி இருக்கும் போது கைது நடவடிக்கை குறித்த அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்க முடியாது.

மேலும் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகை வழங்க கூடாது என்பதை நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும் தற்போது தேர்தல் நேரம் என்பதால் தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று அவர் கேட்பதை தடுக்க முடியாது. குறிப்பாக இந்த விவகாரம் பண மோசடி தடுப்பு சட்டம் 19ன் கீழ் வருகிறதா என்றால், அது கேள்வியாக தான் உள்ளது. ஒரு வழக்கில் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியும். இதில் சாமானியர்களுக்கு வேறு மாதிரியான சட்டம், அரசியல்வாதிகளுக்கு வேறு மாதிரியான சட்டம் என நாங்கள் பார்ப்பது கிடையாது. இருப்பினும் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் தேர்தல் நேரம் என்பதை அவருக்கான விதிவிலக்கான சூழலாக கருதுகிறோம் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

‘அரசு கோப்புகளில் கையெழுத்திட மாட்டார்’
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் நேரத்தில் முதல்வராக இருப்பவர் மிகவும் அவசியமாகும். அமலாக்கத்துறை தரப்பில் சமாளிப்பு தனமான வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால்,அரசின் எந்த வேலைகளும் நிறுத்தப்படக் கூடாது என்ற டெல்லி துணைநிலை ஆளுநரின் நிபந்தனையை தவிர்த்து, வேறு எந்த ஒரு அரசு கோப்பிலும் கையெழுத்திடப் போவது கிடையாது. இதனை நாங்கள் உறுதியாக தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
இதில் மதுபானக் கொள்கை வழக்கு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரையில் நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவிஜா உத்தரவிட்டுள்ளார். அதேப்போல் இதே வழக்கில் தொடர்புடைய கவிதாவின் நீதிமன்ற காவலும் 14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

The post ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: