எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயமற்றது; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கி அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் முத்துசாமி இன்று தொடங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், தற்போது நடக்க உள்ள இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் சு.முத்துசாமி இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா குறுகிய காலத்திலேயே மக்களுக்கு மிக நெருக்கமானவராகவும், நன் மதிப்பை பெற்றவராகவும் இருந்துள்ளார். அதனால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினரின் வேண்டுகோளின்படி உடனடியாக இன்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளோம். நம் முதல்வரும். இத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தின்றியே இருந்தார்.

இருப்பினும், கூட்டணி கட்சியினரையும் கலந்தாலோசித்த பின்னரே, இத்தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கீடு செய்துள்ளார். இன்று வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளோம். வரும் நாட்களில், திமுக அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார்கள். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, பிரசாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுவது நியாயமற்றது.

தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எனும் வாக்குறுதியை முதல்வர் உறுதியாக நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிதி நிலையை படிப்படியாக நாங்கள் சீராக்கி வருகிறோம். நிதி நிலையை பொறுத்து மக்கள் நலத்திட்டங்களும், தேர்தல் வாக்குறுதிகளையும் நமது முதல்வர் நிறைவேற்றி கொண்டு வருகிறார். இவ்வாறு முத்துசாமி கூறினார். இந்த தேர்தல் வாக்கு சேகரிப்பில், அமைச்சர் கே.என்.நேரு, திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: