‘ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்’ சேது சமுத்திர திட்டத்தை தடுக்க மீண்டும் ராமர் பாலம் பிரச்னை: திருமாவளவன் பேட்டி

தூத்துக்குடி: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். சேது சமுத்திர திட்டத்தை தடுக்க மீண்டும் ராமர் பாலம் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்’ என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வேங்கைவயல் பிரச்னை கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்னையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்று குற்றங்களை தடுக்கவும், சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்கும் தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும். இரட்டைக்குவளை முறையை தடுப்பதற்கு சிறப்பு விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

அண்மையில்தான் ஒரு ஒன்றிய அமைச்சர் ராமர் பாலம் இல்லை என்று பேசினார். மீண்டும் அவர்கள் அது ராமர் பாலம் தான் என்று சொல்லுவது அதிர்ச்சியாக உள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத்திட்டத்தை விசிக வாழ்த்துகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கருதுகிறவர்கள் மீண்டும் ராமர் பாலம் பிரச்னையை கையில் எடுக்கின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் தாட்கோ மூலம் கடன் வழங்குவதில் பிரச்னை இருக்கிறது. மானியம் கொடுக்க அரசு முன்வந்தாலும் கடன் கொடுக்க வங்கிகள் முன் வருவதில்லை. வங்கியும் ஒத்துழைத்தால் தான் ஆதி திராவிட மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: