ராகுலின் நடைபயணத்தை பார்த்து அஞ்சும்; பாஜகவுக்குதேர்தல் வெற்றியே குறி மக்களை பற்றி கவலையில்லை: காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்

அமிர்தசரஸ்: ஆளும் பாஜகவுக்கு தேர்தல் வெற்றியே குறி; அக்கட்சிக்கு மக்களை பற்றி கவலையில்லை என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டினார். பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியினர் முன் பேசுகையில், ‘மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பாஜகவுக்கு அக்கறை இல்லை; மாறாக தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அக்கட்சியின் ஒரே கவலையாக உள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளால், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகி வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவையாவும் ராகுலின் நடைபயணத்தில் அறியமுடிந்தது. ராகுலின் நடைபயண வெற்றியை பார்த்து பாஜக அஞ்சுகிறது. காங்கிரஸுக்கு எதிராக ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே உள்ளார்கள்.

நாட்டின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவோ அவர்கள் பேசுவதில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பும் கேள்விகள் குறித்தும் விவாதிப்பதில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் சமூகத்தை பிளவுபடுத்தி வருகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய போது 700 விவசாயிகள் இறந்தனர். ஆனால் பிரதமர் மோடி ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்தவருக்காக (குலாம் நபி ஆசாத்) நாடாளுமன்றத்தில் மோடி அழுகிறார். நாட்டு மக்கள் அனைவரும் இதனை பார்த்தனர். பாஜகவிடம் இருந்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டும்’ என்று பேசினார்.

Related Stories: