முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: மோடி, அமித் ஷாவுக்கு சரத் பவார் கண்டனம்

மும்பை: நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி இமாச்சலபிரதேசத்தில் அண்மையில் பிரசாரம் செய்த மோடி, “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. காங்கிரஸ் அரசு உதவிக்காக உலகம் முழுவதும் மன்றாடியது. ஆனால் இப்போது இந்தியா தன் சொந்த வலிமையில் போராடுகிறது” என்று பேசியிருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “காங்கிரஸ் ஆட்சி காலம் குறித்த மோடியின் பேச்சுகள் வேதனை தருகிறது. பிரதமர் பதவி என்பது ஒரு நிறுவனத்தின் தலைவர் பதவி போன்றது. முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

310 இடங்களுக்கு மேல் பாஜ வெற்றி என அமித் ஷா சொல்கிறார். இன்னும் 2 கட்ட தேர்தல்கள் உள்ளன. தேர்தல் முடிவதற்கு முன் இதுபோன்ற கருத்துகளை வௌியிட கூடாது. முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு அடிப்படையுடன் பேச வேண்டும். இதுபோன்ற அறிக்கைகளை ஏற்க முடியாது” என்று கூறினார்.

The post முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: மோடி, அமித் ஷாவுக்கு சரத் பவார் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: