தெலங்கானாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றிய அரசுக்கு எதிராக புதிய எதிர்ப்பலை: கேரள முதல்வர் பினராய் விஜயன் பேச்சு

திருமலை: மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, பாஜ ஆட்சிக்கு எதிராக புதிய எதிர்ப்பலை உருவாக வேண்டும். நாட்டை பிளவுபடுத்தும் இனவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்’ என தெலங்கானாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்தார். தெலங்கானா மாநிலம், கம்மம் நகரில் பாஜவிற்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் கூடிய பிரமாண்ட பொதுக்கூட்டம் பாரதிய ராஷ்ரிய கட்சி (பிஆர்எஸ்) சார்பில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் ஆகிய 3 மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், தேசிய எதிர்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக முதல்வர் சந்திரசேகரராவ் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு வந்தார். பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் பேசுகையில், ‘‘பாஜ அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ‘நகைச்சுவை இந்தியா’ திட்டமாக மாறிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ என்கிறார்கள், ஆனால் நாட்டில் அனைத்து தெருவிலும் சீனா பஜார்கள் முளைத்துள்ளன. பிஆர்எஸ் தலைமையிலான அரசு ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்தால் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஆயுதப் படைக்கு வீரர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்திற்கு முடிவு கட்டப்படும். எல்ஐசி பங்குகள் விற்பனையை பிஆர்எஸ் கடுமையாக எதிர்க்கிறது. நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை ஏற்படுவதற்கு காரணமே பாஜவும், காங்கிரஸ் கட்சிகளும்தான்’’ என்றார்.

 கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசுகையில், ‘‘சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத சக்திகள் மத்தியில் ஆட்சியில் உள்ளது. கார்ப்பரேட் சக்திகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அரசின் அணுகு முறையால் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது. ஒரே தேசம்- ஒரே வரி, ஒரே தேசம்- ஒரே தேர்தல் போன்ற முழக்கங்கள் கூட்டமைப்பின் கட்டமைப்பை சேதப்படுத்துகிறது.  பாஜவும், ஆர்எஸ்எஸ்ஸூம் இணைந்து நாட்டை ஆட்சி செய்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜ பலவீனப் படுத்துகிறது. எனவே மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும்  அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, பாஜ ஆட்சிக்கு எதிராக புதிய எதிர்ப்பலை  உருவாக வேண்டும். நாட்டை பிளவுபடுத்தும் இனவாத சக்திகளுக்கு எதிராக மக்கள்  ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘பாஜவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதனால், முதல்வர்கள் சிக்கலில் தள்ளப்படுகின்றனர். தமிழகம், டெல்லி, தெலங்கானா, கேரள கவர்னர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனைத்து மக்களும் பார்க்கின்றனர். வளர்ச்சி பணிகளை தடுப்பது தான் ஆளுநர்களின் வேலையாக தெரிகிறது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான நிலையிலும், நாடு பின்தங்கியுள்ளது.  நமக்கு பிறகு சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் முன்னேறி கொண்டிருக்கிறது.  நம் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது.  வருகிற 2024ம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் பாஜவை தூக்கி எறிய வேண்டும்’’ என்றார். இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: