கேரள கோயிலில் தரிசனம் செய்ய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு: மத அடிப்படையில் பிரிவினை பேஸ்புக் பதிவால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பிரசித்தி பெற்ற திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்ய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

இந்துக்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவனும், பார்வதியும் குடிகொண்டு உள்ள இந்த கோயிலில், 2 பேரும் நேர் எதிராக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பார்வதி அமைந்துள்ள கோயில் வருடத்திற்கு 12 நாள் மட்டுமே நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் கோயிலில் தரிசனம் செய்ய கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்த வருடம் ஜனவரி 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை திறந்திருந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் பிரபல நடிகை அமலா பால் இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அவர் இந்து அல்ல என்பதால் தரிசனம் செய்ய நிர்வாகிகள் அனுமதி மறுத்தனர். இதனால் வெளியே நின்று தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். அதன் பிறகு நடிகை அமலா பால், தனது பேஸ்புக் பதிவில், ‘திருவைராணிக்குளம் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றேன். மதத்தை காரணம் காட்டி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எனக்கு தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை.

இது எனக்கு பெரும் துக்கத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் கோயிலுக்கு வெளியே நின்று நான் தேவியின் அருளை பெற்று கொண்டேன். 2023ம் ஆண்டிலும் மத அடிப்படையில் பிரிவினை இருப்பது வேதனையளிக்கிறது. வருங்காலத்திலாவது மனிதனை மதத்தால் பிரிக்காமல் இருக்கும் நிலை வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவைராணிக்குளம் கோயில் நிர்வாகி பிரசூன்குமார் கூறுகையில், ‘நடிகை அமலா பால் தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட பூஜைக்கான கட்டணத்தை கோயில் அலுவலகத்தில் செலுத்தினார். தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசைக்கு கட்டணமும் செலுத்தினார். அப்போது அவரிடம், ‘நீங்கள் இந்துவா’ என்று கோயில் ஊழியர் கேட்டபோது, ‘இல்லை’ என்று கூறினார். இந்த கோயிலில் இந்து அல்லாதவர்களுக்கு தரிசனம் வழங்குவதில்லை.

இது எல்லோருக்கும் தெரியும். அதை புரிந்து கொண்ட பிறகு கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்வதாக கூறிவிட்டு சென்றார். தரிசனம் முடிந்த பின்னர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று கூறியதன்படி அலுவலகம் வந்து பாயசத்தையும் வாங்கி மகிழ்ச்சியுடன் தான் சென்றார். அதன் பிறகு இதை ஒரு பிரச்னையாக ஆக்கியிருக்க வேண்டாம்’ என்றார்.

Related Stories: