கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கடலில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை உப்பு காற்றில் இருந்து சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடப்பது வழக்கம். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது.

இந்தநிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த 2022 ஜூன் மாதம் 6ம் தேதி தொடங்கியது. இதையடுத்து சிலையை சுற்றி 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகளாலான சாரம் அமைக்கப்பட்டது. முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்து, இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரிசெய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் கொண்ட கலவை பூசும் பணி நடந்தது.

அதைத்தொடர்ந்து காகித கூழ் கலவை ஒட்டப்பட்டு, திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்பை அகற்றும் பணி நடந்தது. பின்னர் தண்ணீரால் முழுவதுமாக சுத்தம் செய்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்துமே முடிவுற்ற நிலையில், சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தை பிரிக்கும் பணி நடந்து வந்தது. அதுவும் முடிந்து விட்டது.  இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து வெகுவிரைவில் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: