கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.2000: மகளிரணி விழாவில் பிரியங்கா உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று மகளிரணி விழாவில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தெரிவித்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நானே.. நாயகி என்ற தலைப்பில் விழா நடந்தது. இதில்  பொது செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர், தினசரி குடும்ப செலவு, அத்தியாவசிய  விலைவாசி உயர்வால் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் எந்த வித அடிப்படை வருமான நிபந்தனையின்றி செலுத்தப்படும். இதற்கு கிருக லட்சுமி திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெண்களுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  ஊழல் நிறைந்த பாஜ ஆட்சியில் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை கர்நாடகாவில் சுருட்டியுள்ளார்கள். பெங்களூருவில் 8 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.3,200 கோடி கமிஷன் தரப்பட்டுள்ளது. எஸ்ஐ ஆட்சேர்ப்பில் ஊழல், அரசு வேலைவாய்ப்பில் ஊழல்  என கர்நாடகாவில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை.   இவ்வாறு அவர் கூறினார்.

* நானே.. தலைவி; முதல்வர் கிண்டல்

முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்பள்ளியில் கூறுகையில், ‘காங்கிரஸ் தோல்வி முகம் கண்டுவருகிறது. அதனால் அவர்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கிவைக்க அக்கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தியை அழைத்துவந்துள்ளனர். அவர் பின்னால் எந்த கர்நாடக பெண்மணியும்  இல்லை. இதனால் அவரே மேடைஏறி நானே நாயகி(தலைவி) என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். இதை எந்த கர்நாடக பெண்ணும் ஏற்றுக்கொள்ளமாட்டார். நானே.. தலைவி என்று கட்அவுட் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தேன். காங்கிரசில் பிரியங்கா காந்தி தன்னை தானே தலைவி என்று அழைத்து கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது’ என்றார்.

Related Stories: