நாசரேத் சந்தி பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க டிராபிக் காவலர் நியமிக்கப்படுவாரா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாசரேத்: நாசரேத் சந்தி பஜார் பகுதியில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க போக்குவரத்து காவலர் மீண்டும் நியமிக்கப்படுவாரா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாசரேத்தில் தூய யோவான் பேராலயம், கடைகள்,  பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள்  உள்ளன. தொழிற்கல்வி, உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு காலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சென்று மாலையில் திரும்புவர். மேலும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களும் சென்று திரும்புகின்றனர்.

 இதில் நாசரேத் சந்தி பகுதி வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும்  முக்கிய சாலை பகுதியாக உள்ளது.

காலை, மாலை நேரங்களில் நாசரேத் சந்தி வளைவு பகுதியில்  மக்கள் சென்று திரும்புகையால் கூட்டநெரிசல் ஏற்படுகிறது.  அப்போது பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு அனைவரும் அவசர கோலத்தில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் நிகழ்ந்து வருகிறது. மாணவ,மாணவிகள், அலுவலர்கள் மற்றும் இதர மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் விபத்து நிகழ்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. ஆதலால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் நாசரேத் சந்தி பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக நாசரேத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் கூறுகையில் ‘‘நாசரேத்தைப் பொருத்தவரை நாசரேத் சந்தி பகுதிதான் நெல்லை, வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக அரசு பஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகள்  ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து நெருக்கடி நிகழ்ந்து வருகிறது. அத்துடன் சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெருக்கடி, விபத்துகளை தவிர்க்கும் வகையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து நாசரேத்தைச் சேர்ந்த பாஜ பிரமுகர் ரூபன் கூறுகையில் ‘‘நாசரேத் சந்தி பஜாரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை செயல்பட்டு வந்த டிராபிக் காவலர் முறை தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விழாக்காலங்களில் இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: