திருமங்கலம் அருகே வீரவரலாறு; ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரருக்கு கோயில்: 400 ஆண்டுகளாக சிலை வைத்து வழிபாடு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே 400 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஜல்லிக்கட்டு வீரருக்கு கோயில் எழுப்பி மக்கள், வீரர்கள் வணங்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டியை சேர்ந்தவர் அழகுத்தேவர். 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த மாடுபிடி வீரர். இவர் பங்கேற்கும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் அடக்க முடியாத காளைகளையும் அடக்கி சாதனை படைத்து வந்தார். மதுரை அருகே ஒரு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அழகுத்தேவர் கலந்து கொண்டு புகழ்பெற்ற காளைகளை அடக்கி அசத்தினார்.

அதில் ஒரு காளையை அடக்கும்போது முட்டியதில் இவரது வயிற்றில் காயம் ஏற்பட்டது. காயத்தையும் பொருட்படுத்தாமல் துண்டால் வயிற்றை சுற்றி கட்டிக்கொண்டு தன்னை தாக்கிய ஜல்லிக்கட்டு காளையையும் அடக்கி வெற்றி பெற்றார். மாடு குத்தியதால் காயம் அடைந்த அழகுத்தேவர் சிறிது நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிர் பிரியும் நிலையில் தனக்கு சிலை வைத்து கோயில் எழுப்பி வழிபாடு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து இவரது வாரிசுதாரர்கள் அழகுத்தேவருக்கு சிலை எடுத்து தற்போது வரை வழிபட்டு வருகின்றனர்.

இவரது குடும்பத்தினரே பூசாரியாக இருந்து வருகின்றனர். சொரிக்காம்பட்டியில் உள்ள இந்த கோயிலை கிராமமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ‘பாட்டன் கோயில்’ என கூறி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு செல்லும் வீரர்கள் தங்களது காளைகளுடன் வந்து அழகுதேவரின் பாட்டன் கோயிலை வணங்கி செல்கின்றனர். இவ்வாறு வணங்கி செல்வோர் போட்டியில் கட்டாயம் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை இதுவரை இருந்து வருகிறது. எனவே ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கும் செல்லும் மாடுபிடி வீரர்கள் பாட்டன் கோயிலில் வந்து வணங்கி சென்று வருகின்றனர்.

Related Stories: