மதுரவாயலில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது

பூந்தமல்லி: மதுரவாயலில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் சீமாத்தமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (48). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையில் குட்கா விற்கப்படுவதாக மதுரவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கடையின் உள்ளே மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 417 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஐயப்பனை கைது செய்தனர். காவல் நிலையம் அனைத்து சென்று விசாரணை செய்தனர். அதில், வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக குட்காவை வாங்கி வந்து இங்கிருந்து பிரித்து மற்ற கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் ஐயப்பன் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மளிகை கடையில் மூட்டை மூட்டையாக 417 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: