நொய்யல் ஆற்றை மீட்க அன்புமணி நடைபயணம்

கோவை: பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ‘நொய்யல் ஆற்றை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் ‘நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும்’ என்ற லோகோவை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காவிரி ஆறு 5 கோடி மக்களுக்கு நீர் ஆதாரத்தை கொடுக்கிறது. நொய்யல் ஆறு, பவானி ஆறு  போன்றவை இயற்கை கொடுத்த வளம். 40 ஆண்டுகளுக்கும் முன்பு நொய்யல் ஆற்று நீரை அள்ளி பருகலாம். தற்போது மிகுந்த மாசடைந்துள்ளது. ஏரிகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்க மாநில மற்றும் ஒன்றிய அரசு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனசாட்சி இல்லாத ஜிஎஸ்டி-யால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  நொய்யலை மீட்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுமக்கள், இளைஞர்கள் இதில் ஒன்றிணைய வேண்டும். நொய்யலை மீட்கும் வரை ஓயமாட்டேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: