தீப மை அனுப்புவதாக பேஸ்புக்கில் தகவல்: தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.! தி.மலை கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற தீபத்திருவிழா கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. அப்போது, 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. கடந்த 6ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது, சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு தீபமை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீப மை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திரு அண்ணாமலையார் கோயில் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், ‘தீப மை வேண்டும் என்றால் பக்தர்கள் இன்பாக்சில் மெசேஜ் செய்யுங்கள், கூரியரில் அனுப்பி வைக்கப்படும், ஓம் நமசிவாய’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முகநூல் பக்கம், அண்ணாமலையார் கோயிலின் அதிகாரப்பூர்வமானது என நம்பிய சிலர், தங்களுக்கு தீபமை அனுப்பி வைக்க வேண்டும் என அதில் பின்னூட்டம் இட்டுள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்ததாவது: அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப மை விரைவில் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மகா தீப நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் தீபமை ₹10 என்ற கட்டணத்திலும் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அண்ணாமலையார் கோயிலுக்கு என எந்த அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமும் இல்லை. எனவே, அண்ணாமலையார் கோயில் எனும் பெயரில் தனி நபர்களின் முகநூல் பக்கத்தை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். கோயில் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள், அண்ணாமலையார் கோயிலின் இணையதளத்தில் வெளியிடுகிறோம். அதில் வெளியாகும் தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது. மேலும், அண்ணாமலையார் கோயில் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி, தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: