திருப்பூரில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு திறனாய்வு போட்டிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 8-ஆம் தேதி மாணவர் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.வினீத் தகவல் அளித்துள்ளார்.

திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் 22 இடங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றது. ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவிகள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றது. இந்த கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு தலா ரூபாய் 500, ரூபாய் 300, ரூபாய் 200 பரிசளிக்கப்படுவதுடன் பாராட்டு சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. அத்துடன் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் கூறியுள்ளார்.

அதன்படி 19-வது புத்தகத் திருவிழா ஜனவரி 27 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவ மாணவியர் கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.

இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இரவு வானம், இயற்கை காட்சி, தமிழர் திருநாள், நான் ரசித்த கார்ட்டூன் ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

அவர்கள் ஓவியப் போட்டியில், பூமிப்பந்தை காப்போம், எனது கனவு, விபத்தில்லா சாலை, ஜல்லிக்கட்டு ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம். அதேபோல் கட்டுரை போட்டியில் சாதிக்க வேண்டிய சாதனைகள், வேண்டாம் யுத்தம், உழவே தலை, உடற்பயிற்சியும் உடல் நலமும் என்ற நான்கு தலைப்புகளில் ஒன்றில் கட்டுரை எழுதலாம். இதில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இயற்கையும் வாழ்வும், ஒப்பற்ற தலைவர்கள், கனவும் கணினியும், கொரோனாவிற்குப் பின் ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம். கட்டுரைப் போட்டியில் நான் காண துடிக்கும் தேசம், புரட்டிப் போட்ட புத்தகம், என்று தணியும் பூமி, போதை அல்ல பாதை ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை எழுதலாம். கவிதை போட்டியில், பாரடா உன் மானுடப்பரப்பை, வியர்வைத் துளிகள், மாதரைப் மாதரைப் போற்றுவோம், பெரும் பொருளே பேரழகே!ஆகிய நான்கில் ஒரு தலைப்பில் கவிதை புனையலாம்.

இப்போட்டிகள் திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே எஸ் சி அரசு மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கேயம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் அரசு நடுநிலைப்பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர் பி.வி.கே.என் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி என திருப்பூர் மாவட்டத்தில் 22 பள்ளிகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஓவியப் போட்டிகள் ஞாயிறு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், கட்டுரைப் போட்டிகள் பகல் 11 மணி முதல் 12 மணி வரையும், கவிதைப்போட்டி நண்பகல் 12 மணி முதல் மதியம் 01 மணி வரையும் நடைபெறும். போட்டிக்குத் தேவையான தாள்கள், ஓவியம் வரைவதற்கான டிராயிங் சீட்டுகள் வழங்கப்படும். கட்டுரைப் போட்டி நான்கு பக்கங்களுக்கு மிகாமலும், கவிதை போட்டி இரண்டு பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்போர் தங்கள் பெயர் படிக்கும் வகுப்பு, பள்ளி மற்றும் வசிப்பிட முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும். ஏதேனும் ஒரு மையத்தில் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories: